வெற்றி என்பது விழாமல் இருப்பதல்ல.. விழுந்த ஒவ்வொரு முறையும் மீண்டும் கம்பீரமாய் எழுந்து நிற்பது..!

Thursday, October 26, 2017

Sunday, January 2, 2011

எரிகிற வீட்டில்..!!

பெண்மையை வர்ணிக்காத
ஒரு
கவிஞன்..

புரிகின்ற வரிகளுடன்
ஒரு
புதினம்..

ஆபாசம் கலவா
ஒரு
திரைப்படம்..

அர்த்தப் பேச்சுடன்
ஒரு
அரட்டை..

ஊழல் செய்யாத
ஒரு
உலகம்..

காமம் கலவாத
ஒரு
காதல்..

கடமைத் தவறாத
ஒரு
அரசு அதிகாரி..

கண்ணியமோடு பேசும்
ஒரு
அரசியல்வாதி..

அறிவு தாகம் கொண்ட
ஒரு
மாணவன்..

அண்டை நிலத்துக்கு ஆசைப்படா
ஒரு
அன்னியன்..

இவை
கனவுகள்தாம் என்றாலும்
ஒரு
கவிதையாவது கிடைத்ததே..!!
(09-04-2001 அன்று எனது டைரியை ஆக்கிரமித்திருக்கும் எனது பழைய கவிதை இது..)

Tuesday, July 6, 2010

உளிகள் (விகடனில் வெளியான கட்டுரை)

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் B.Sc., கணிதம் படித்துகொண்டிருந்த காலம் அது. அப்போது நடந்த ஒரு நிகழ்வு.

எப்பொதுழும் நகைச்சுவை பேச்சுக்கள் அதிகம்
நிறைந்தவர்கள் அதிகம் இருப்பதாலோ என்னவோ என் விடுதி அறை எப்போதும் நிறைந்து வழியும். அவ்வபோது சீரியசாகவும் பேச்சுப் போகும்.
எல்லோரும் தான் வளர்ந்த பிறகு என்னென்ன செய்யப் போகிறார்கள் என ஒரு பட்டியலே நீளும். நானும் நிறையக் கருத்துக்கள் கூறுவேன். சமூகத்தில் நாம் எப்போதும் மற்றவர்களுக்கு பயன்படும்படியாகத்தான் வாழவேண்டும் என அடிக்கடி என் நண்பர்களிடம் அரட்டை அடிப்பதும் உண்டு.
என்னுடைய இந்த கருத்தை அமோதிக்காதவர்கள் யாருமே இல்லை..

இப்படியே என் கல்லூரி வாழ்க்கை ஓடிகொண்டே இருந்தது...

ஒரு நாள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் செல்ல திருச்சி அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் நானும் என் நண்பன்
முருகனும்(B.Sc-Botony) பேருந்துக்காகக் காத்துக்கொண்டிருந்தோம். அவன் வகுப்புத் தோழன் ஒருவன் அந்த வழியே வர முருகன் அவனிடம் பேசிகொண்டிருந்தான்.
நான் பேருந்து வருகிறதா என்பதிலேயே கவனமாக இருந்தேன்.

அப்போது ஒரு குரல் என் காலடி அருகே கேட்டது..

“தம்பீ, என் லுங்கியை கொஞ்சம் கட்டி விடரையா.. கெஞ்சி கேட்டுகறேன்...”
-என்னைத்தான் அப்படி அழைத்தார் அவர்..
அவர் பார்கவே அருவெருப்பாக, அழுக்கு படிந்த உடையோடு, குஷ்ட நோய் கொண்டு, கைகளில் விரலே இல்லாமல்.. எனக்கு பார்க்கவே கூசியது.
அவ்வளவு அருவெருப்பு. என் நண்பன் இது எல்லாம் கவனிக்காமல் தன் நண்பனிடம் அரட்டையை தொடர்ந்துகொண்டே இருந்தான். நானும்
ஒன்றும் தெரியாதவன் போல சற்று விலகி சென்றுவிட்டேன். ஒரிரு நிமிடங்கள் ஆகி இருக்கும்.. முருகன் எனை அழைப்பது கேட்டது..
திரும்பி பார்த்தேன்...

அங்கு.. தன் இரு கைகளாலும் அந்த குஷ்ட நோய் தாக்கி இருந்த மனிதரை பின்புறம் நின்று அனைத்து தூக்கிப்பிடித்திருந்தான்.. அவர் கிட்டத்தட்ட
நிர்வாணமாய் இருந்தார்...
”வாடா அன்பு.. அந்த லுங்கியை கொஞ்சம் எடுத்துக் கட்டிவிடுடா.. சீக்கிரம்...”-

ஓடிப்போய் கீலே கிடந்த அவரது லுங்கியை எடுத்துக் கட்டிவிடேன்.. அவரும் நன்றியோடு எங்களை பார்த்தார்..

“பாவம்டா அவரு.. நான் என் பிரண்டுகிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்ல.. அதனால இவரை கவனிக்கலை.. நீயும் பாவம் கவனிக்காம பஸ்சை பார்த்துக்கிட்டு
இருந்திட்டே...”

என்ன மனசு இவனுக்கு...

”முருகா.. உனக்கு அந்த சீல் வடியும் மனிதனைத் தொட அருவெருப்பா இல்லையா ..”

“முன்னெல்லாம் இருந்துச்சிடா.. இப்போல்லாம் கிடையாது.. நீதான்டா அடிக்கடி சொல்லுவ.. மத்தவங்களுக்கு பயன்படும்படி வாழனம்னு... அதுல ஒரு சுகமும்
இருக்குடா.. நான் உனக்குத்தான் தேங்ஸ் சொல்லனும்.. இப்படி ஒரு எண்ணம் என் மனசுல வர உன் பேச்சுதான் காரணம் அன்பு..”

எனக்கு என்னவோ செய்தது..

“சாரிடா...”

”எதுக்கு சாரி...”

பதில் சொல்லாமல் நின்றேன்... சரியான பேருந்து இப்போது வந்தது... இனி போகவேண்டிய இடம் தெளிவாகத் தெரிந்தது...

Friday, March 19, 2010

சுவேதா (விகடனில் வெளியான கவிதை)

நாட்டாண்மை வீட்டு
நாயகி அக்காவும்
சேரித் தெரு
சேண்டி மாமாவும்
ஊரை விட்டு
ஓடிப் போக
ஒத்திகைப் பார்த்த
இடம்
இவளிடம்...

உடையார் வீட்டு
தென்னந்தோப்பில்
ஒளிந்திருந்து
திருடிய
ஒன்பது தேங்காயை
ஒளித்து வைத்து
தின்ற இடம்
இவளிடம்...

பத்து லிட்டர்
பால் தரும்
பார்வதியின் பசுமாடு
மேய்ந்தப் பின்
வந்து
நீர்ப் பருகி
இளைப்பாறும்
ஈர நிலம்
இவளிடம்...

பள்ளி செல்லும்
சிறுவர்கள்
பள்ளிவிட்டு
வந்தப் பின்னே
பந்தாடி மகிழும்
இடம்
இவளிடம்...

நல்லக்
காதல்களும்
பல
கள்ளக் காதல்களும்
தன்னிடம்
அரங்கேறினாலும்
யார்க்கும் சொல்லாமல்
கடைசிவரை
கன்னியம் காக்கும்
இடம்
இவளிடம்...

வயசான பெருசுகள்
வாய் அசைப் போட
மாலைப் பொழுதுகளில்
மகிழ்வோடு
உலவ வரும்
இடம்
இவளிடம்...

இவள்..
தன் வளைவுகளால்
அனைவரையும்
வசீகரித்தவள்...
வளமையும்
செழுமையும்
இவள் சொத்து..

இவள்..
எங்கள் உயிரிலும்
உணர்விலும்
கலந்த
அனைவருக்குமான
காதலி..
எப்போதும்
எங்கள் ஊரின்
கேள்வி குறி...

இவள்..
எங்கள் ஊர்
சுவேத நதி..
சுவேதா...!

Wednesday, March 10, 2010

”வாழ்த்துக்கள்”

காலை எழுந்து
கணவரைக் கவனித்துவிட்டு..
அரக்க பரக்க குழந்தைகளிடம்
அன்பை பரிமாறி..

சூடு பரக்கும் காபியுடன்
அத்தை மாமாவை
எழுப்பி
“சுடு தண்ணியாட்டம் இருக்கு
உன் காபி”
என்ற வழக்கமான ஏசுதல்களை
பரிசாய்ப் பெற்று..

அவருக்கு ஒரு வகை
என் குழந்தைகளுக்கு வேறு வகை
சர்க்கரை வியாதி இருப்பதால்
பெரியவர்களுக்கு ஒரு வகை
என என் அடுப்படி வேலைக்கே
அதிக நேரம் ஓடிப் போக..

எஞ்சிய நேரத்தில்
ஏதோ சாப்பிட்டு
பாதிப் பசியுடன்
அவசரமாய் ஓடினேன்
ஆபிசுக்கு பஸ் பிடிக்க..

படிக்கட்டு ரோமியோக்கள்
தாண்டி
பயங்கர நெரிசல்களின் ஊடே
நிற்க இடம் இன்றி
திணரும் தருனத்தில்
எவனோ ஒருவன் என்
இடைக் கிள்ளி
தன் சிற்றின்ப சல்லாபத்தை
சற்றும் இறக்கம் இன்றி
காட்டிப்போக..
ஐந்து நிமிட
தாமதத்தில் அவசரமாய்
அடைந்தேன் ஆபிசை..

வழக்கமான என் சீட்டில்
வேலைப் பார்க்கையில்
பக்கத்து ஆசாமிகளின்
பலான ஜோக்குகள்
காதில் விழ
அதை கண்டும் காணாமல்
கவனம் மாற்றி
கடைசி நிமிடம் வரை
கடுமையாய்
உழைத்து..

சம்பள கவர் வாங்கி அதை
கணவரிடம் கொடுத்து
சேமிக்க சில வழிகள்
சிரமப்பட்டு கண்டறிந்து
சொல்ல வாயெடுத்தேன்
அவரிடம்

”சொல்ல தேவையில்லை”-என்ற அவர்
சொன்ன வார்த்தை இது
“பெட்டை கோழி கூவி
விடியவா போகுது..”

சோர்ந்த உடலுடனும்
சுமை நிறைந்த மனதுடனும்
படுக்கை அறை நுழைந்த
என்னை
அழைத்தது என் கைபேசி..
குறுஞ்செய்தி ஒன்றை தாங்கி..

தோழி ஒருவள்
அனுப்பி இருந்தாள் அதை..
“கொஞ்சம் வேலையடி..!
தாமத வாழ்த்துக்கு
வருந்துகிறேன்..

மகளிர் தின வாழ்த்துக்கள்..!”.

மகளிர் மசோதா

நிறைவேறியதாம்
மகளிர் மசோதா..
இனி
நாடாளுமன்றங்களில்
பழைய எம்.பி-களின்
பினாமிகளாய்
அவர்களது
மனைவிகள்...!